கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை: மேலும் ஒரு அதிர்ச்சி
|மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவராமன், பள்ளி முதல்வர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
போச்சம்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (32). இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்றுனராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அம்மாணவி தன் பெற்றோரிடம் அழுதவாறு கூற, அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சிவராமன் மீது போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான சிவராமனை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே சிவராமனை நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கி கட்சி தலைமை அறிவித்தது.
இந்த சூழலில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.
என்.சி.சி. பயிற்சியாளரும் முன்னாள் நா.த.க. நிர்வாகியுமான சிவராமனை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டிருந்தநிலையில், அவர் கோவையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசார் கைது செய்ய சென்றபோது சிவராமன் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவராமன், பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன், என்.சி.சி. போலி பயிற்சியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான சிவராமன் என்.சி.சி பயிற்சிக்காக மத்திய அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.