கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி : தேர்வு பயத்தினால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை
|கிருஷ்ணகிரி அருகே தேர்வு பயத்தினால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி என்பவரின் மகன் லட்சுமணன்(வயது 17).
மத்தூரில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது .கடந்த மூன்று தினங்களாக தேர்வு பயத்தினால் லட்சுமணன் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று இறுதி தேர்வு நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு பின்புறம் மற்றொரு கூரை வீட்டில் புடவையால் லட்சுமணன் தூக்குப்போட்டு கொண்டுள்ளார்.
இரவு 9 மணி ஆகியும் லட்சுமணனை காணாத அவரது பெற்றோர் அவரை தேடும் பொழுது பின்புறம் உள்ள கூரை வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு லட்சுமணன் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து லட்சுமணன் அம்மா மஞ்சுளா (40) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.லட்சுமணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வு பயத்தினால் பிளஸ் 2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.