திருவள்ளூர்
பூண்டி ஏரி நிரம்பியதால் கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது
|பூண்டி ஏரி நிரம்பி வழிவதால் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது.
நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஆந்திர அரசு தமிழகத்திற்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
அதன் பேரில் கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி கடந்த 25-ந் தேதி பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது.
ஏரியின் பாதுகாப்பை கருதி அன்று மாலை உபரிநீரை மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் வீணாக கடலுக்கு போய் செல்கிறது. இதனை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்வதை தடுத்து நிறுத்தி கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிக்கு திருப்பி விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் பெயரில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜங்காள பள்ளி பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் அமைக்கப்பட்ட மதகு வழியாக தண்ணீர் கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிக்கு நேற்று மாலை திறந்து விடப்பட்டது.
வினாடிக்கு 425 கன அடிவிதம் தண்ணீர் திறந்துவிப்பட்டுள்ளது. கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியின் உயரம் 36.61 அடி ஆகும். இதில் 500 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 34.11அடியாக பதிவாகியது. 419 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில் பூண்டி ஏரிக்கு நேற்று நீர் வரத்து 1,000 கனஅடியாக குறைந்தது. இதனால் பூண்டியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 500 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.