< Back
மாநில செய்திகள்
கோடை காலம் என்பதால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நீர் திறப்பு - ஓரிரு நாட்களில் பூண்டி அணைக்கு வந்து சேரும்
சென்னை
மாநில செய்திகள்

கோடை காலம் என்பதால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நீர் திறப்பு - ஓரிரு நாட்களில் பூண்டி அணைக்கு வந்து சேரும்

தினத்தந்தி
|
3 May 2023 1:13 PM IST

கோடைகாலமான தற்போது சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் பூண்டி அணையை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையை அடுத்த பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கடலூர் மாவட்டம் வீராணம் ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த அணைகளில் தற்போது 7 ஆயிரத்து 496 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது, மொத்த கொள்ளளவில் 64 சதவீதம் ஆகும்.

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்று நீர் தமிழகத்துக்கு வழங்கப்படும்.

தற்போது கோடைகாலம் என்பதால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டத்தை உயர்த்தி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

அதன்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆந்திர கிராமங்களுக்கு குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைக்காக ஆயிரம் கன அடி தண்ணீர் எடுக்கப்பட்டுவிடும்.

மீதமுள்ள ஆயிரம் கன அடி தண்ணீர்தான் தமிழகத்துக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த தண்ணீர் பூண்டி அணையில் சேமிக்கப்பட்டு வினியோகிக்கப்படும்.

சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு 2 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப்படும். எனவே, 2 ஆயிரம் மெட்ரிக் கன அடி கிருஷ்ணா நீரை திறந்துவிட ஆந்திர அரசை வலியுறுத்தி உள்ளோம்.

கண்டலேறு-பூண்டி கால்வாயில் தினமும் ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தால், பூண்டி அணையில் இருந்து சுமார் 1½ மாதங்களுக்கு 2 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீரை திறந்துவிட முடியும்.

புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து நகரின் தேவைக்காக ஒருநாளைக்கு 700 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தற்போது சென்னை நகருக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்து 29 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்குகிறது.

இதில் சுமார் 992 மில்லியன் லிட்டர் தண்ணீர், குழாய்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது. எனவே, கிருஷ்ணா நீர் சேமிப்பை அதிகரிக்கவேண்டிய அவசியம் உள்ளது. இதன்மூலம் நீர்நிலைகளில் நீர் ஆதாரங்களை தக்கவைத்து தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

கண்டலேறு-பூண்டி இடையேயான கால்வாயில் தண்ணீர் கசிவு மூலம் நீரிழப்பை குறைக்க இந்த கால்வாயை மேம்படுத்துவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

தற்போது சென்னையைச் சுற்றி பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துவருகிறது. இதன்மூலமும் ஏரிகளின் நீர்மட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். சென்னையில் கோடைகாலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்