திருவண்ணாமலை
கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்
|கண்ணமங்கலம், ஆரணி, சேத்துப்பட்டு பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, இதனையொட்டி உறியடி விழா, வழுக்குமரம் ஏறுதல் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம், ஆரணி, சேத்துப்பட்டு பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, இதனையொட்டி உறியடி விழா, வழுக்குமரம் ஏறுதல் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணஜெயந்தி
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதனையொட்டி இதை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து மாலையில் உறியடிப்போட்டி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவில் காளசமுத்திரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாணிக்கவேலு நடுவராக பொறுப்பேற்று பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மகா அலங்காரமும், மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. தொடர்ந்து சேவூர் கிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிருஷ்ணபகவான் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது 5 இடங்களில் உறியடி விழாவும் நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு போலீஸ் நிலைய பகுதியில் உள்ள சஞ்சீவி ராய வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி விழா நடந்தது. கிருஷ்ணரை அலங்காரம் செய்து பாம்பு வாகனத்தில் வைத்து வீதி உலா வந்தனர். உறியடி விழாவை தொடர்ந்து சறுக்கு மரம்ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல் பழம்பேட்டையில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் அலங்காரம் செய்து வீதி உலா வந்தார். இதனையொட்டி உறியடி நிகழ்ச்சி, சறுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இஞ்சி மேடு வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடித்தல், சறுக்கு மரம் ஏறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனையொட்டி கண்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ராஜ கோபுரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டது. பெண்கள் கும்மியடிக்கும் நிகழ்ச்சியும், விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.