திண்டுக்கல்
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
|திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கிருஷ்ணன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி 5 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவிலில் திருவிழா தொடங்கியது. காலையில் சாமிக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலையில் உறியடி திருவிழா நடந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் சாமி மின்னொளி தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். இதற்கிடையே கோவிலில் நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும், குழந்தைகள் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது. .
உறியடி திருவிழா
இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் உறியடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுதர்சன ஹோமம், மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு உறியடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல், திருச்சி சாலை கே.ஆர்.நகரில் உள்ள ரூப கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணருக்கு பால், தயிர், திருமஞ்சனம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பக்தர்கள் தங்களது குழந்தைகளை கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழைத்து வந்தனர். பின்னர் சாமி குருவாயூரப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திண்டுக்கல் சத்திரம் தெரு செல்வவிநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நத்தம்
நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், தீர்த்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்கள் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி எழுந்தருளி அருள்பாலித்தாார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி பெரியகடைவீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு துளசி மாலை சாத்தி சாமி தரிசனம் செய்தனர். பழனி பட்டத்து விநாயகர் கோவில் அருகே விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் பழனி பகுதியை சேர்ந்த குழந்தைகள் பலர் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்தனர். பின்னர் அதில் சிறந்த முறையில் வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வழுக்குமரம் ஏறிய பக்தர்கள்
குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் உள்ள பழமையான கல்யாண நரசிங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சாமி பல்லக்கில் வீதி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து உறியடி உற்சவம், அதன் பின்னர் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்காக கோவில் அருகே 21 அடி உயரத்தில் வழுக்கு மரம் நடப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு வழுக்குமரத்தில் போட்டி போட்டு ஏறினர். முடிவில் அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.