< Back
மாநில செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

தினத்தந்தி
|
7 Sept 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் உள்ள ஸ்ரீநவநீதகிருஷ்ணர் கோவிலில் 18-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை பூஜை மற்றும் ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ருக்மணி, ராதை, நவநீதகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு, உறியடி திருவிழா மற்றும் பள்ளிக்கூடங்களில் மாறுவேடப்போட்டி ஆகியன நடத்தப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி அருகே கோட்டக்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களுக்கு மாறுவேடம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மாறு வேட போட்டியில் மாணவ-மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பார்வையாளர்கள் முன்பு தோன்றினர். இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மகாலட்சுமி பரிசு மற்றும் இனிப்புகளை வழங்கினார். விழாவில் உதவி ஆசிரியர் வினோத் உள்பட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மூங்கில்துறைப்பட்டு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி, ராதே கிருஷ்ணா் கோவிலில் உற்சவர் கிருஷ்ணருக்கு பால், வெண்ணெய், பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் புதுப்பட்டு, பிரம்மகுண்டம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவர் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே திருவண்ணாமலை சாலையில் பக்தர்கள் கிருஷ்ணர் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதில் சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தியாகதுருகம்

தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சீனிவாச பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் மாலை உற்சவர் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கிருஷ்ணர் வேடம் அணிந்து மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை யாதவர் சமூகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள ராதே கிருஷ்ணர் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. முன்னதாக வேத கோஷங்கள் முழங்க யாகவேள்வி நடைபெற்றது. இதில் ராதே கிருஷ்ணர் ஐம்பொன் சிலைக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து உறியடி மற்றும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியும், பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் சங்கராபுரம், காட்டுவன்னஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்