< Back
மாநில செய்திகள்
காஷ்மீரில் மொத்த வியாபாரிகளிடம் ரூ.3 கோடிக்கு ஆப்பிள் வாங்கி மோசடி - கோயம்பேடு பழ வியாபாரி கைது
சென்னை
மாநில செய்திகள்

காஷ்மீரில் மொத்த வியாபாரிகளிடம் ரூ.3 கோடிக்கு ஆப்பிள் வாங்கி மோசடி - கோயம்பேடு பழ வியாபாரி கைது

தினத்தந்தி
|
13 Nov 2022 1:27 PM IST

காஷ்மீரில் மொத்த வியாபாரிகளிடம் ரூ.3 கோடிக்கு ஆப்பிள் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட கோயம்பேடு பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை விருகம்பாக்கம், பிருந்தாவன் நகர் ரோஜா தெருவைச் சேர்ந்தவர் தினகரன் (வயது 39). ஆப்பிள் வியாபாரியான இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இவர், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து அதிகளவில் ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து வந்தார்.

இவ்வாறு ஆப்பிள் பழங்கள் அனுப்பி வைத்த வியாபாரிகள் 3 பேருக்கு தினகரன் ரூ.3 கோடிக்கு காசோலைகளை கொடுத்ததாகவும், ஆனால் அந்த காசோலைகள் அனைத்தும் வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், தினகரனை தொடர்பு கொண்டபோது அவர், செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். இந்த மோசடி பற்றி ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசில் புகார் அளித்த வியாபாரிகள், கோர்ட்டிலும் தினகரன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மோசடியில் ஈடுபட்ட தினகரன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர். அதன்பேரில் தினகரனை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த தினகரனை, கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை காஷ்மீர் மாநில கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

கைதான தினகரன், ஏற்கனவே காஷ்மீரை சேர்ந்த 2 வியாபாரிகளிடம் ரூ.1 கோடியே 63 லட்சத்துக்கு ஆப்பிள் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த வழக்கில் அந்த மாநில போலீசாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்