ஈரோடு
சென்னிமலை அருகே மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
|சென்னிமலை அருகே மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சென்னிமலை
சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ளது மேட்டூர். இங்கு புதிதாக மங்கள விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி வழிபாட்டுடன் தொடங்கியது. பின்னர் பஞ்சகாவ்யம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் கோபுர கலசம் வைத்தல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர். மாலையில் வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று அதிகாலை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கி 2-ம் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள விநாயகர் விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் வலசுபாளையம் குழுவினர் சார்பில் வள்ளி கும்மி ஆட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை திரளானோர் கலந்து கொண்டு கிராமிய பாடலுக்கு கும்மி ஆட்டம் ஆடினார்கள்.