ஈரோடு
ஊஞ்சலூர் அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|ஊஞ்சலூர் அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே புஞ்சைகாளமங்களம் கிராமம் பச்சாம்பாளையத்தில் செல்வவிநாயகர், மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 17-ந் தேதி காலை 7 மணி அளவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. முதலில் விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், துர்க்கா, மகாலட்சுமி வழிபாடு, கோபூஜை நடந்தது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 10 மணி அளவில் ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
அதன்பின்னர் மாலையில் முளைப்பாலிகை அழைத்தல் நிகழ்ச்சியும், வாஸ்து பூஜையும், முதல் காலயாக பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி அளவில் தேவார இன்னிசை, 2-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலையில் 3-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு விமான கலசம் வைத்தல், யந்திர ஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் விநாயகர் பூஜை, 4-ம் கால யாக பூஜை நடந்தது. காலை 7.30 மணி அளவில் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கோபுர கலசங்களுக்கும், செல்வ விநாயகர், மகா மாரியம்மன் தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.