ராமநாதபுரம்
ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் தீவிர சோதனைக்குபின் அனுமதி
|ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
ராமேசுவரம்,
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
தடை
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருந்தே ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன், கேமரா பொருட்கள் கொண்டு செல்ல தடை அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்ல மதுரை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கூடுதலாக சோதனை செய்யப்பட்டது.
அனுமதி இல்லை
குறிப்பாக செல்போன்களுடன் வந்த பக்தர்களிடம் செல்போனை கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் லாக்கரில் வைத்துவிட்டு வர வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி பக்தர்களை திருப்பி அனுப்பினர். போலீசாரின் அறிவுரை ஏற்று செல்போனுடன் வந்த ஏராளமான பக்தர்கள் லாக்கரில் வைத்துவிட்டு கோவிலில் தரிசனம் செய்து சென்றனர்.