திருப்பூர்
கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை
|வேடப்பட்டி கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேடப்பட்டி கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி விரதம்
புரட்டாசி மாதம் என்பது புண்ணிய மாதமாகவும், பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது.இந்த மாதத்தில் மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரிபிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டி கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூலவரான கிருஷ்ணர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பாமா,ருக்மணி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உறியடி திருவிழா
கோவில் வளாகத்தில் நடந்த திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அத்துடன் மாலையில் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உறியடித்திருவிழா மற்றும் வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்.
உடுமலை திருப்பதி கோவில்
இதுபோல் உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அந்த வகையில் உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் அருகே உள்ள செங்குளத்தின் கரையையொட்டி இயற்கை எழில் சூழ்ந்துள்ள இடத்தில் அமைந்துள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று ஸ்ரீ வேங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
மாலையில் கோவில் வளாகத்தில் அனிக்கடவு நஞ்சேகவுண்டன்புதூர் ஸ்ரீீ உச்சி மாகாளியம்மன் வள்ளி கும்மியாட்ட குழுவினரின் கும்மியாட்டம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
பெருமாள் கோவில்கள்
இதேபோன்று உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சவுரிராஜபொருமாள் கோவில், தென்னைமரத்து வீதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரியகடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ணசாமி கோவில், ஏரிப்பாளையத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.