சிவகங்கை
பிள்ளையார்பட்டி கோவிலில் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம்
|விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கோவிலில் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.
திருப்பத்தூர்,
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கோவிலில் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு இந்த விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி தினந்தோறும் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தேரோட்டம், சந்தகாப்பு
9-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக காலையில் கற்பக விநாயகர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டு அதன் பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
பெரிய தேரில் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. இதில் கற்பகவிநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்தும், சண்டிகேசுவரர் தேரை முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
முன்னதாக ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் மூலவருக்கு நடைபெறும் சந்தனகாப்பு அலங்காரம் இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்பாடு
விழாஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் கருப்பஞ் செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சுப்பிர மணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.