ராமநாதபுரம்
மண்ணுக்குள் புதையுண்ட 13-ம் நூற்றாண்டு கோவில்
|பரமக்குடி அருகே மண்ணுக்குள் புதையுண்ட 13-ம் நூற்றாண்டு கோவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே மண்ணுக்குள் புதையுண்ட 13-ம் நூற்றாண்டு கோவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
அய்யனார் கோவில்
பரமக்குடி அருகே உள்ளது மேலப்பார்த்திபனூர் கிராமம். இங்கு கி.பி. 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பட்டீஸ்வர முடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. கோவிலில் உள்ள ஒவ்வொரு கல்லை தட்டினால் ஒவ்வொரு ஓசையை எழுப்பும். நாட்கள் ஆகஆக இந்த கோவில் மண்ணுக்குள் புதையுண்டு விட்டது. தற்போது மேல் கூரை பகுதி மட்டும் தரை மட்டத்தில் உள்ளது.
அந்த கோவிலை மீண்டும் தோண்டி சீரமைத்து கும்பாபி ஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உத்தரவு
அதன் படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அந்த கோவிலை புனரமைக்க ் மாநில திருப்பணி ஆலோசனைக் குழு உத்தரவின்பேரில் கோவிலை சுற்றி தோண்டும் பணி நேற்று தொடங்கியது. எந்திரம் மூலம் சுமார் 8 அடி வரை கோவிலை சுற்றி தோண்டப்பட்டது.
அப்போது மண்ணுக்குள் புதையுண்ட பகுதிகள் முழுவதும் வெளியே தெரிந்தது. ஏராளமான கற்கள் ஆங்காங்கே உடைந்து மண்ணுக்குள் புதைந்து இருந்ததை எந்திரம் மூலம் தோண்டி எடுத்தனர். மூலஸ்தானத்தில் பட்டீஸ்வரமுடைய அய்யனாரும், கோவில் வெளி பிரகாரத்தில் நந்தி சிலையும் உள்பிரகாரத்தில் விநாயகர், வராகி அம்மன் சிலைகளும் உள்ளன.
ஒரு கால பூஜை
இந்த கோவில் தோண்டி எடுக்கப்பட்டதும் தொல்பொருள் துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை கோவில் தக்கார் முருகானந்தம் பார்வையிட்டார். இதுகுறித்து கோவில் பூசாரி மனோகரன் கூறுகையில், கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மிகவும் சக்தி வாய்ந்த கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நிறைய இருந்தன. ஆனால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் நிறைய நிலங்கள் போய் விட்டது. தற்போது 1.6 ஏக்கர் மட்டும் கோவில் இடமாக உள்ளது. தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.