< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு சம்பவம்: தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

தினத்தந்தி
|
16 Sept 2023 7:03 AM IST

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

கோவை,

கோவை மாவட்டம் உக்கடத்தின் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவருடைய வீட்டில் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. விசாரணையில் வழக்கு தொடர்பாக முகமது தவ்பிக், குன்னூரை சேர்ந்த உமர்பாருக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி ஆகியோரை கைது செய்தனர். இதன் மூலம் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டின் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் திருவிக நகர் முஜ்பீர் ரகுமான் என்பவர் வீட்டிலும், நீலாங்கரை, கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகமது இத்ரிஸ் என்பவரின் வீடு உள்பட தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்