திருவள்ளூர்
கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சீரமைப்பு பணிகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
|மணலிபுதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சீரமைக்கப்பட்ட பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கொசஸ்தலை ஆறு
கொசஸ்தலை ஆறானது வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியில் தொடங்கி கேசவரம் அணைக்கட்டுக்கு வந்த பின்னர் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது. இந்த ஆறு 136 கிலோமீட்டர் பயணித்து பூண்டி வழியாக தாமரைப்பாக்கம், காரனோடை வழியாக வல்லூர் அணைக்கட்டுக்கு சென்று நிரம்பிய பின்னர், நாப்பாளையம், வெள்ளிவாயல், மணலிபுதுநகர், இடையஞ்சாவடி, சடையாங்குப்பம் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கொசஸ்தலை ஆற்றின் இருபுற கரைகளும் சேதமடைந்ததில், மழைநீர் வெள்ளிவாயல் மணலிபுதுநகர் உட்பட பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியது.
கரைகளை பலப்படுத்தும் பணி
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆய்வு செய்த நிலையில், தமிழக நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கியதுடன் நீர்வளத் துறை அதிகாரிகள் நேரில் முகாமிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
இதனை அடுத்து நீர்வளத் துறையின் மூலம் செம்பியம், மணலி, வழுதிகைமேடு ஆகிய ஏரிகளில் மண் எடுத்து கொசஸ்தலை ஆற்றின் இருபுற கரைகளை உயர்த்தியும் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இதனால் கொசஸ்தலை ஆற்றில் இருபுற கரைகளும் உயர்த்தியும் மேம்படுத்தப்பட்ட நிலையில், மணலிபுதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரை பகுதிகளுக்கு செயற்பொறியாளர் பொதுபணிதிலகம், உதவி செயற்பொறியாளர் அருண்மொழி, உதவி பொறியாளர் சுந்தரம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கரைகளின் பக்கவாட்டில் கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணி மற்றும் இதர பணிகள் பருவ மழைக்குப்பின் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.