திருவள்ளூர்
கொசஸ்தலை- ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் மூழ்கியதால் 3 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் அவதி
|கொசஸ்தலை- ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரியில் மாண்டஸ் புயல் காரணமாக தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கடந்த 3 நாட்களாக மெய்யூர், ராஜபாளையம், ஆவாஜிப்பேட்டை, கல்பட்டு, ஏனம்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு மாற்றுப் பாதையில் திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர்.
மேலும், ஆந்திர மாநிலம், நகரி அருகே உள்ள பிச்சாட்டூர் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஆந்திர மாநில அரசு ஏரியின் பாதுகாப்பை கருதி ஆரணி ஆற்றில் நேற்று முன்தினம் தண்ணீரை திறந்து விட்டது. இதனால் புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே ஆரணி ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது. மேலும், மங்கலம்-ஆரணி இடையே மண் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இதுவும் ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மங்களம், புதுப்பாளையம், காரணி, நெல்வாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரியபாளையம் வழியாக பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, மெய்யூர் மற்றும் புதுப்பாளையத்தில் போர்க்கால அடிப்படையில் மேம்பாலங்கள் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.