நாமக்கல்
கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்கப்படுமா ? மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
|கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்கப்படுமா ? மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
சேந்தமங்கலம்:
கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரி
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அருவிகள், வரலாற்று புகழ்வாய்ந்த கோவில்கள் கொல்லிமலைக்கு பெருமை சேர்த்து வருகின்றன. அத்துடன் மிளகு, காப்பி, அன்னாசி, பலா போன்ற பழங்களும், பழங்கால அரிசி வகைகளும் இங்கு விளைந்து வருகிறது.
கொல்லிமலை செம்மேட்டில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை கடந்த 19.3.1969-ந் தேதி திறக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, எக்ஸ்ரே அறை, பிசியோதெரபி அறை, பல் மருத்துவ பிரிவு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ அறை, பாம்புகடி சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மயக்க மருந்து பிரிவு போன்றவை செயல்பட்டு வருகின்றன. 7 டாக்டர்கள் மேற்பார்வையில் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
நீண்ட கால குறை
மலைப்பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் மற்றும் பிணவறை அமைக்கப்படாமல் இருப்பது நீண்ட கால குறையாக உள்ளது. இதனால் கொல்லிமலையில் யாராவது விபத்தில் இறந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்கு சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க கொல்லிமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மர வீடு
இதுகுறித்து கொல்லிமலையை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சோளக்காட்டை சேர்ந்த பால்முருகன்;- சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலை செம்மேடு அருகே சக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள எஸ்.பி.எம். காம்பவுண்ட் பகுதியில் ஆங்கிலேயர்கள் தங்கி மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தனர். அதற்காக மரத்தினால் ஆன ஒரு சிறிய வீட்டை உருவாக்கி, அதன் மூலம் சேவை செய்து வந்தனர். தற்போது அந்த பங்களா சிறு, சிறு சேதங்கள் அடைந்து இருந்தாலும், இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. வரலாற்று நினைவு சின்னமாக இருக்கும் அதனை சீரமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செம்மேட்டில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் போன்ற சில நோய்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் அனைத்து வகையான சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தினசரி ஸ்கேன் எடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. எனவே செம்மேடு அரசு மருத்துவமனைக்கு என்று தனியாக ஒரு கிணறு அமைக்க வேண்டியது அவசியமாகிறது.
பிரேத பரிசோதனை கூடம்
செல்வராஜ் (சோளக்காடு);- கொல்லிமலையின் மையப்பகுதியில் தாலுகா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பிரேத பரிசோதனை கூடம் மற்றும் இறந்த நபர்களின் உடலை பாதுகாக்க பிணவறை இல்லாதது, மலைவாழ் மக்களுக்கு நீண்ட காலமாக ஒரு குறையாகவே இருந்து வருகிறது.
மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகளில் பரவலாக மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். வயது முதிர்வின் காரணமாக இறப்பு நேரிட்டாலோ அல்லது கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும், அங்கிருந்து டோலி கட்டி பிணத்தை சாலை பகுதிக்கு கொண்டு வந்து வாகனங்கள் மூலம் ஏற்றி செல்லப்படுகிறது. அந்த பிணங்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்கு சேந்தமங்கலம் அல்லது நாமக்கல் மற்றும் ராசிபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று வருகின்றனர். அப்பகுதிகளுக்கு மலையிலிருந்து சுமார் 60 கி.மீட்டர் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை தவிர்க்க கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலுதவி சிகிச்சை மையம்
இல்லத்தரசி ஜோதி கணேசன்;- மலைப்பகுதியில் மலைவாழ் மக்கள் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ உதவி அளிக்கும் விதமாக நடமாடும் மருத்துவ வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் சில பகுதிகளில் அந்த வாகனம் செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதை தவிர்த்து அனைத்து இடங்களுக்கும் அந்த வாகனம் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் கொல்லிமலைக்கு வருவதற்கு அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து வர வேண்டும். இந்த நிலையில் கொண்டை ஊசி வளைவு பகுதியில் விபத்துக்கள் நேர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே கொண்டை ஊசி வளைவுகளில் மைய பகுதியில் ஒரு முதலுதவி சிகிச்சை மையம் ஏற்படுத்தலாம்.