< Back
மாநில செய்திகள்
கொல்லிமலையில்  ரீ-சர்வே குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்  ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலையில் 'ரீ-சர்வே' குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
18 July 2022 6:43 PM IST

கொல்லிமலையில் ‘ரீ-சர்வே’ குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் குப்புசாமி தலைமையில் நேற்று கொல்லிமலையில் உள்ள 6 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்தனியாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுக்களில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கொல்லிமலை ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் நிலங்களை கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை ரீ-சர்வே செய்தனர். அதில் பல்வேறு பட்டா நிலங்கள் அனுபவம் ஒருவரிடமும், பெயர் மாறுபட்டும் உள்ளது. அதேபோல் பட்டா நிலங்களை தரிசு நிலங்களாக ரீ-சர்வே செய்து மாற்றி விட்டார்கள். அதன் காரணமாக மக்கள் இடையே பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருகிறது. மேலும் ரீ-சர்வே என்ற பெயரில் தவறான கணக்குகளை வைத்து கொண்டு வேறு பத்திர கிரையமும் செய்து வருகிறார்கள்.

ரீ-சர்வேபடி உள்ள வரைபடங்கள் அனைத்தும் தவறாக உள்ளது. இதன் காரணமாக கூட்டுறவு சங்கங்களிலும், வங்கிகளிலும் விவசாய கடன் பெற முடியாத சூழல் ஏற்பட்டு, பழங்குடியின மக்கள் பெறும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ரீ-சர்வே குளறுபடிகளை சரிசெய்து புதிதாக மறுநில அளவை செய்து கணினி மயமாக்கல் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பத்திரத்தின்படி பழைய சிட்ட அடங்களில் உள்ளது போல பட்டாறு மாறுதல் செய்வதற்கும் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

இதில் குண்டூர்நாடு, குண்டனிநாடு, எடப்புளி நாடு, திருப்புளிநாடு, பெரக்கரைநாடு, சித்தூர்நாடு என 6 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்