நாமக்கல்
கொல்லிமலையில் 36 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
|கொல்லிமலையில் 36 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டத்தின் இயற்கை எழில்கொஞ்சும் மலைவாசஸ்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலையில் இயற்கை வளங்கள், வன விலங்களை பாதுகாக்கும் நோக்கில் மதுப்பிரியர்கள் குடித்து விட்டு ஆங்காங்கே வீசி செல்லும் காலிபாட்டில்களை திரும்ப அவர்கள் வாங்கிய கடையில் ஒப்படைக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் இதற்காக சம்பந்தப்பட்ட மதுக்கடைகள் மூலம் ஒவ்வொரு பாட்டிலுக்கும் தலா ரூ.10 வழங்கப்படும் என்று அறிவிக்ப்பட்டு கடந்த மாதம் 15-ந் தேதி முதல் உத்தரவு அமலுக்கு வந்தது.
இதையொட்டி கொல்லிமலை சோளக்காட்டில் உள்ள மதுக்கடையில் கடந்த 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 22 ஆயிரத்து 512 மதுபாட்டில்கள் விற்கப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 354 காலிபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் 16 ஆயிரத்து 185 மதுபாட்டில்கள் விற்கப்பட்டதில் 8 ஆயிரத்து 151 காலிபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. செம்மேட்டில் உள்ள மதுக்கடையில் 43 ஆயிரத்து 135 மதுபாட்டில்கள் விற்கப்பட்டதில் 19 ஆயிரத்து 421 காலிபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மொத்தமாக கொல்லிமலையில் உள்ள 3 மதுக்கடைகள் மூலம் 35 ஆயிரத்து 926 காலிபாட்டில்கள் திரும்ப பெற்றுள்ளதாகவும், அவற்றிற்கு தலா ரூ.10 அந்தந்த கடைகள் மூலம் திரும்ப வழங்கப்பட்டதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.