மயிலாடுதுறை
கொள்ளிடம் ஆற்றில் 3-வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு
|மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 3-வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம் புகுந்து உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 3-வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம் புகுந்து உள்ளனர்.
வெள்ளப்பெருக்கு
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை அடைந்து அணை முழு கொள்ளளவை எட்டியது. மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்து காவிரி, கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தற்போது 2 லட்சம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களான நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கீழவாடி, ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்று வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து 3-வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனா்.
முகாம் அமைப்பு
இந்த நிலையில் நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த ஒரு சில கிராம மக்கள் மட்டும் கரையில் வந்து முகாமில் தங்கி இருந்த நிலையில் மீதி உள்ள மக்கள் தங்கள் வீட்டில் உள்ள மாடியில் தங்கி இருந்தனர். நேற்றும் வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர் வடியவில்லை. இதனால்
அப்பகுதியில் உள்ளவர்கள் மீண்டும் கரைக்கு வர தொடங்கியுள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அனுமந்தபுரம் தொடக்கப்பள்ளி, கோபாலசமுத்திரம் வடரங்கம் ஆகிய பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஆடு, மாடுகளை பராமரித்து வரும் மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு பாதுகாப்பாக முகாமிற்கு வராமல் கொள்ளிடம் ஆற்றின் கரையிலேயே தங்கி உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் பந்தல் அமைத்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
பயிர்கள் மூழ்கின
கொள்ளிடம் கரையோர பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் கால்நடைக்கு தேவையான மருந்துகள் மற்றும் தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இரு கரைகளை தொட்டு சுழன்று செல்வதால் கொள்ளிடம் ஆற்று படுகையில் விவசாயிகள் சாகுபடி செய்த பூக்கள் மற்றும் தோட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பொதுமக்கள் எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்ற தண்ணீரின் அளவைவிட நேற்று சற்று குறைந்த அளவில் தண்ணீர் சென்றது. இருப்பினும் தண்ணீரின் வேகம் மிக அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
கொள்ளிடம் கரையோர பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன் ., பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சந்தித்து போதிய அளவு உணவுகள் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தனர்.