நாமக்கல்
கொல்லிமலையில்வல்வில் ஓரி விழா தொடக்கம்
|கொல்லிமலையில் நேற்று கலைநிகழ்ச்சிகளுடன் வல்வில் ஓரி விழா தொடங்கியது.
வல்வில் ஓரி விழா
கொல்லிமலை செம்மேடு வல்வில்ஓரி அரங்கில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்கள் கண்காட்சி நேற்று நடந்தது. நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். பொன்னுசாமி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வல்வில் ஓரி மன்னரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காகவும், விளக்கம் அளிப்பதற்காகவும் 22-க்கும் மேற்பட்ட துறைகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் சார்பில் கொல்லிமலை வாழ்மக்களின் பராம்பரிய கலை நிகழ்ச்சி, மங்கள இசை, தெருக்கூத்து, கும்மியாட்டம், பரதநாட்டியம், கோலாட்டம், வல்வில் ஓரி குறித்த சொற்பொழிவு, பரதம், தப்பாட்டம், கிராமிய நடனம், விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரகாஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார், சுற்றுலாத்துறை அலுவலர் அபராஜிதன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) நடராஜன், கொல்லிமலை தாசில்தார் அப்பன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், தனபால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வில்வித்தை போட்டி
விழா நடைபெற்ற அரங்கத்திற்கு முன்பு காய்கறி மற்றும் பழங்களால் ஆன அலங்கார வளைவு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. விழாவை யொட்டி வல்வில் ஓரி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடைநிலை ஊழியர் ஒருவரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) வில்வித்தை போட்டி நடக்கிறது. தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் சிறந்த அரங்குகளை அமைத்த அரசு அதிகாரிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.