நீலகிரி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்பு-விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
|கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அதனால் விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அதனால் விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இதன்படி மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் ஒத்திவைப்பு
இந்தநிலையில் கடந்த மாதம் விசாரணை முடிந்து ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு நேற்று மாவட்ட நீதிபதி முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் சயான், வாளையாறு மனோஜ், ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி ஆகிய 4 பேர் மட்டும் கோர்ட்டில் ஆஜராகினர்.
அப்போது கனகராஜின் செல்போன் பதிவுகள் தொடர்பாக கூடுதலாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது. சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதால் அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு தரப்பு சிறப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. வழக்கு விசாரணை தொடர்பாக வெளி மாநிலங்களில் இன்னும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதுவரை கனகராஜ் 16 செல்போன்கள் உபயோகித்துள்ளார். இதில் 6 சிம்கார்டுகள் அவரது பெயரில் உள்ளது. இது குறித்தும் முழுவதும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து எங்களது கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றார்.