கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
|கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார்.
இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி. ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இந்த வழக்கு கடந்த 22ம் தேதி நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 10 பேரும் ஆஜராகாததால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை 29ம் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், கோடநாடு வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜராகியிருந்தார். மற்ற 9 பேரும் ஆஜராகவில்லை. மேலும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில், ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார், அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகினர்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு கோர்ட்டு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஆஜராகாத 9 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.