கொடநாடு வழக்கு; வெளிநாட்டு அழைப்புகள் குறித்து இன்டர்போல் உதவியுடன் விசாரணை - சி.பி.சி.ஐ.டி. தகவல்
|கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன் 7 முறை வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வந்துள்ளதாகவும், இந்த வெளிநாட்டு அழைப்புகள் குறித்து இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை ஜூலை 26-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.