தீவிரமடையும் கொடநாடு வழக்கு - விசாரணைக்காக கேரளா செல்லும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்
|கொடநாடு வழக்கு விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது கேரளா விரைந்துள்ளனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் கொடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ், வாகன விபத்தில் உயிரிழந்தார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக உதகை கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்களை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் செல்போன் தகவல் பரிமாற்றங்களை ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலை, கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பு கேரள பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்களில் ஊட்டி, கோத்தகிரி, கொடநாடு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த 2 கார்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது கேரளா விரைந்துள்ளனர்.