< Back
மாநில செய்திகள்
கோடநாடு வழக்கு: வருகிற 26-ம் தேதி குஜராத் தடயவியல் குழு தமிழகம் வருகை
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு: வருகிற 26-ம் தேதி குஜராத் தடயவியல் குழு தமிழகம் வருகை

தினத்தந்தி
|
9 Jan 2024 5:18 AM GMT

கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார்.

இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி. ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொலைப்பேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய வருகிற 26-ம் தேதி குஜராத் தடயவியல் பல்கலைக்கழக வல்லுநர் குழு தமிழகம் வருகிறது .19 டவர்களில் பதிவான 60 செல்போன் எண்களின் உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு 8,000 பக்க அறிக்கை கடந்த வாரம் சிபிசிஐடியிடம் வழங்கப்பட்டது. செல்போன் உரையாடல் விவரங்கள் வழங்கப்பட்ட நிலையில் வருகிற 11-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்