கோடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளி சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை விசாரணை
|கோடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கோவை,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவிற்குள் கடந்த 2017-ம் ஆண்டு புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக 11 பேரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். இதையடுத்து கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் பலரை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். ஜாமீனில் உள்ள சயானுக்கு, இந்த விசாரணைக்கான சம்மன் கடந்த 5-ம் தேதி அனுப்பப்பட்டது. அதன்படி, நாளை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு சயான் ஆஜராக உள்ளார்.
கோடநாடு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன் தகவல் பரிமாற்ற விவரங்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.