கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை ஜன.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
|கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு ஜன.27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
உதகை,
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
விசாரணையில் அரசு தரப்பு தனிப்படை போலீசார் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் 320 சாட்சியங்களிடம் மேலும் கூடுதலாக விசாரணை நடத்த சிபிசிஐடி அனுமதி கோரப்பட்டது. அரசு தரப்பு மூலம் சாட்சிகள் மற்றும் 720 தொலைபேசி உரையாடல் பதிவுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜனவரி 27 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.