கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
|கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை போலீசார் மறு விசாரணை நடந்தினர். பல்வேறு கோணங்களில் பலரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.இவ்வழக்கின் விசாரணைக்கு சயான் உள்ளிட்ட 10 பேரும் ஆஜராக உள்ளனர். இன்று காலை கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.