கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... கூடுதல் அவகாசம் கேட்ட சிபிசிஐடி
|கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் இதுவரை நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா உட்பட 44 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகை,
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், சதீசன், தீபு, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜராகினர்.
மேலும் சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி முருகவேல், டிஸ்பிகள் சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோர் ஆஜராகினர். தரப்பு வழக்கறிஞரான ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர்.
பின்னர் வழக்கு விசாரணை நீதிபதி முருகன் தலைமையில் நடைபெற்ற நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து சிபிசிஐடி போலீஸார் தகவல் பெற வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கேட்கப்பட்டது. இதனை ஏற்ற மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் வழக்கை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 24 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு தொடர்பாக இதுவரை 48 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது எனக் கூறினார்.
மேலும், சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் விசாரணையில் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த சமயத்தில் பொறுப்பில் இருந்த அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளரான முரளி ரம்பாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எலக்ட்ரானிக் எவிடன்ஸ் மற்றும் செல்போன் உரையாடல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து சிபிசிஐடி போலீஸார் தகவல் பெற வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கேட்கப்பட்டதால் வழக்கின் விசாரணை எதிர்வரும் பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஷாஜகான் தெரிவித்தார்.