< Back
மாநில செய்திகள்
கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
15 Dec 2023 1:17 PM IST

சாட்சியம் அளிக்க இபிஎஸ் விலக்கு கோருவதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறினர்.

சென்னை,

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னைத் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி, கடந்த 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, மாஸ்டர் கோர்ட்டிற்கு இந்த வழக்கை ஐகோர்ட் அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான தன்னால் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் வழக்கறிஞர் ஆணையரை நியமித்து தனது வீட்டிலேயே வைத்து சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி, பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. நேரில் ஆஜராக பழனிசாமிக்கு விலக்கு அளித்தும், வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோடநாடு வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய மாஸ்டர் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள் என்று அவரது தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதோடு, எடப்பாடி பழனிசாமி விலக்கு கோருவதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும் கூறினர்.

மேலும் செய்திகள்