கொடைக்கானலில் ஆற்றை கடக்க முயன்ற குட்டியானை பாறை இடுக்கில் சிக்கி உயிரிழப்பு
|கொடைக்கானலில் ஆற்றை கடக்க முயன்ற குட்டியானை பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தது.
திண்டுக்கல்,
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்த மரங்களையும், பசுமை போர்வை போர்த்திய மலைப்பகுதிகளையும் கொண்டது. இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, மிளாமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், பழனி வனச்சரகத்துக்கு உட்பட்ட கொடைக்கானல் தாலுகா பள்ளங்கி பெருங்காடு கிராமத்தில் உள்ள அளத்துறை ஆற்றில் குட்டியானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல், பழனி வனச்சரகர் கோகுலகண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அங்கு சுமார் 1½ வயது உள்ள குட்டியானை ஒன்று இறந்து கிடந்தது. உடனே யானையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றினர். பின்னர் யானையின் உடலை வனப்பகுதியிலேயே புதைத்தனர். ஆற்றில் இறங்கி தண்ணீரை கடக்க முயன்றபோது குட்டியானை, பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்ததாக கால்நடை மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.