< Back
மாநில செய்திகள்
கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கு இன்று முதல் அனுமதி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கு இன்று முதல் அனுமதி

தினத்தந்தி
|
22 Sept 2023 6:15 AM IST

கொடைக்கானல் பேரிஜம் பகுதிக்கு யானைகள் இடம் பெயர்ந்ததால் சுற்றுலா இடங்களை பார்வையிட இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டது.

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் பேரிஜம் ஏரி, தொப்பிதூக்கிப்பாறை, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, பில்லர்ராக் ஆகியவை முக்கிய சுற்றுலா இடங்களாகும். இந்நிலையில் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த யானைகள் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மோயர் பாயிண்ட் பகுதியில் புகுந்து 13 கடைகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. மேலும் 2 தினங்களாக அப்பகுதியிலேயே யானைகள் முகாமிட்டு இருந்தன. இதனையடுத்து சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதற்கிடையே மாவட்ட வனஅலுவலர் யோகேஷ் குமார் மீனா, வனச்சரகர்கள் செந்தில், சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் இரவு, பகலாக யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் பேரிஜம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இதனை நேற்று பகலில் வனத்துறையினர் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து வனச்சரகர் செந்தில் கூறுகையில், யானைகள் பேரிஜம் பகுதிக்கு இடம் பெயர்ந்து உள்ளதால் 12 மைல் சுற்றளவு உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, பில்லர்ராக் ஆகிய சுற்றுலா இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும். அங்கு யானைகள் நடமாட்டம் குறைந்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்