தேனி
கொடைக்கானல் மலைப்பாதையில் 60 அடி பள்ளத்தில் பாய்ந்த மினிலாரி
|கொடைக்கானல் மலைப்பாதையில் 60 அடி பள்ளத்தில் மினி லாரி பாய்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் பூலத்தூர் மலைக்கிராமத்தில் இருந்து மதுரைக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்றது. பின்னர் அங்கு காய்கறிகளை இறக்கி விட்டு பூலத்தூருக்கு மினிலாரி வந்து கொண்டிருந்தது. மினி லாரியை, கும்பரையூரை சேர்ந்த மோகன் (வயது 27) ஓட்டினார். அவருடன், அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (27) என்பவரும் வந்தார். வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் டம்டம் பாறை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து 60 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
இந்தநிலையில் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் சத்தம் கேட்டு எட்டி பார்த்தனர். அப்போது பள்ளத்தில் மினிலாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் பள்ளத்தில் இறங்கி மினி லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த மோகன், பாலமுருகனை மீட்டனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக, வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.