கொடைக்கானல்: சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு
|கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று கடந்த மே மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நடைமுறை கடந்த 7.5.2024 முதல் நேற்று வரை அமலில் இருந்தது. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எனவே, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 'epass.tnega.org' என்ற இணையதளம் மூலம் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பாஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை 0451-2900233, 9442255737 என்ற எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.