கொடநாடு வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் போராட்ட அறிவிப்பு; எடப்பாடியைக் குறி வைத்தா...?
|கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கூறி உள்ளனர்.
சென்னை:
சென்னை பசுமை வழிச்சாலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்தியலிங்கம் கூறியதாவது:-
கொடநாடு வழக்கை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடநாடு சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார். இதன்பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கொடநாடு வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
துணை முதல் அமைச்சருக்கு அரசில் எந்த அதிகாரமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் கொடநாடு வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்தது திமுக. அதிமுக, இரட்டை இலை வழக்கில் சட்டப்போராட்டம் தொடர்கிறது.
பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை. பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர் என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுத்திருக்கும் கொடநாடு வழக்கு விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டனர்.
கொடநாடு கொலைவழக்கு பரபரப்பான கிரைம் சினிமாவை பார்ப்பது போலவே இருந்தன. இந்த சம்பவத்தில் முக்கிய நபராகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட கனகராஜ் என்பவர், ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர். அவர் சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு நபரான சயான் என்பவர் சென்ற காரும் கேரளாவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சயானின் மனைவியும் மகளும் இறந்தனர். சயான் மட்டும் காயத்துடன் உயிர் தப்பினார். தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வந்த நடுஹட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
2019ஆம் ஆண்டு தெகல்ஹா முன்னாள் ஆசிரியரான மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பேட்டியில், சயானும் அவரது நண்பருமான வாளையார் மனோஜும் பேசியிருந்தனர். அதில், கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகக் கூறியிருந்தனர். இதற்காக, சயான், மனோஜ், மேத்யூ சாமுவேல் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்தன.
சயான் உட்பட 10 பேர் சேர்க்கபட்டு, தற்போது அனைவரும் ஜாமினில் உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 320 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.