< Back
மாநில செய்திகள்
கொடநாடு வழக்கு: நேபாளம் விரையும் சிபிசிஐடி போலீசார்
மாநில செய்திகள்

கொடநாடு வழக்கு: நேபாளம் விரையும் சிபிசிஐடி போலீசார்

தினத்தந்தி
|
29 Oct 2022 8:25 AM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேபாளம் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்காகும்.

கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி மாதவன் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி முருகவேல், சந்திர சேகர், அண்ணாதுரை, வினோத் உள்ளிட்ட 3 டிஎஸ்பிக்கள், ஒரு ஆய்வாளர் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்படவுள்ளது.

தனிப்படை விசாரித்தது போலவே சிபிசிஐடி போலீசாரும் கோவையில் அலுவலகம் அமைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்த தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவர்களின் வீட்டிற்கே சென்று விசாரிக்கவும், கனகராஜ் விபத்து சம்பவம் தொடர்பாக சேலத்திற்கு சென்று விசாரணை செய்யவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கொடநாடு சம்பவத்தில் முக்கிய நபரான காவலாளி கிருஷ்ண தாபா நேபாளத்தில் இருக்கும் நிலையில் அங்கு சென்று விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்