< Back
மாநில செய்திகள்
வெற்றி பெறும் வழியை அறிந்து தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

வெற்றி பெறும் வழியை அறிந்து தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்

தினத்தந்தி
|
7 May 2023 12:15 AM IST

மாணவ, மாணவிகள் வெற்றி பெறும் வழியை அறிந்து தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

கொரடாச்சேரி:

மாணவ, மாணவிகள் வெற்றி பெறும் வழியை அறிந்து தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

கலந்துரையாடல்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டாரம், அம்மையப்பனில் நடைபெற்று வரும் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போட்டித்தேர்விற்கு செல்லும் மாணவ, மாணவிகளுடன் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கலந்துரையாடினார்.

அப்போது மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் கூறியதாவது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் தமிழக அரசால் சிறப்புத் திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்

இம்மாதிரி பள்ளியில் பயிலும் உங்களுக்காக அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து விதமான தேர்வுகளிலும் பங்கேற்கும் வகையில் சிறப்பு பாட வல்லுநர்களை கொண்டு ஸ்மார்ட் போர்டு மூலம் இணைய வகுப்புகள், பல்வேறு பள்ளிகளிலுள்ள சிறந்த ஆசிரியர்களை கொண்டு நேரடி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. போட்டித்தேர்வில் வெற்றி பெறாவிட்டாலும் அதைப்பற்றி சிந்திக்காமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். எந்த இடத்தில் குறைவாக இருக்கிறோம் என்பதை அறிந்து அதை சரிசெய்து அடுத்த வெற்றி பெற வேண்டும். ஒரு தேர்வு மட்டுமே இறுதியானது அல்ல. வெற்றி பெறும் வழியை அறிந்து தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நீட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெறாவிட்டாலும், மீண்டும் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.

உயர்ந்த நிலையை அடைய வேண்டும்

இன்று உயர் பதவிகளில் இருப்பவர்கள் பலர், பல முயற்சிகளுக்கு பின்னரே வெற்றி பெற்று உயர்நிலை அடைந்துள்ளார்கள். நீங்களும் உயர்ந்த நிலையை அடைந்திட உழைக்க வேண்டும். நீட் தேர்வில் முடிவுகள் எப்படி இருப் பினும் சாதாரண மனநிலையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்விற்கு முன்பு உடலையும், உள்ளத்தையும் சரியாக வைத்து கொள்ள வேண்டும். அனைவரும் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைந்திட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தலைமையாசிரியர் விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்