கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன தெரியுமா?
|கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையம் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். லாக்கர் ரூம்கள், ஓட்டல்கள், சிறிய உணவு கடைகள், ஏடிஎம் மையங்கள், டிராவல் ஏஜென்சி அலுவலகங்கள், தங்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன. எனினும், விழாக்காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டநெரிசல் அதிகமாக உள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து மீண்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
எனவே, கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகத்தின் மொத்த பரப்பளவு 88.52 ஏக்கர். இதில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட பெரியது. தென் தமிழகமான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
இங்கு 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள், விரிவான பார்க்கிங் வசதிகள் உள்ளன. பயணிகளுக்கான தங்குமிடங்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் போக்குவரத்து அலுவலகங்களும் உள்ளன. தனியாக புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க, வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை மக்கள் எளிதாக சென்றடைந்து பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்திற்கு அருகில் ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது. விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையின் புறநகர் பகுதி மக்கள் பயனடைவார்கள். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.