திருவள்ளூர்
ரெயில் நிலையத்திற்குள் பட்டா கத்தியுடன் வந்த கும்பல்: கல்லூரி மாணவருக்கு சரமாரி வெட்டு; ரூட் தல பிரச்சினையா? ரெயில்வே போலீசார் விசாரணை
|கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திற்குள் பட்டா கத்தியுடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவருக்கு வெட்டு
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் நேற்று காலை புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்வதற்காக பயணிகள் காத்திருந்த நிலையில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மின்சார ரெயில் ஒன்று வந்தது. அப்போது பட்டா கத்தியுடன் ரெயிலில் ஏறிய வாலிபர்கள் 3 பேர் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்த மாநிலக்கல்லூரியில் படிக்கும் மாணவன் திலீப் (வயது 18) என்பவரை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினர். வலியால் மாணவன் அலறி துடித்தார். உடனே அந்த கும்பல் ரெயிலில் இருந்து இறங்கி கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக தப்பினர்.
ரூட் தல பிரச்சினையா?
தலையில் பலத்த வெட்டுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் திலீப்பை ரெயில்வே போலீசார் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 9 தையல்கள் போடப்பட்டது.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டா கத்தியுடன் ரெயில் நிலையத்துக்குள் வந்தவர்கள் யார்? யார்?, இந்த மோதலில் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்பு உள்ளதா?, மாணவர்களுக்குள் ரூட் தல பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு ரெயில்வே போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர். பயணிகள் பீதியடையும் வகையில் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.