திருப்பூர்
ஓய்வு பெற்ற விமானப்படை போலீஸ்காரர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை
|ஓய்வு பெற்ற விமானப்படை போலீஸ்காரர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை
பல்லடம்
பல்லடம் அருகே ஓய்வு பெற்ற விமானப்படை போலீஸ்காரர் வீட்டிற்குள் பட்டாக்கத்தியுடன் புகுந்த ஆசாமிகள் அவர்களை மிரட்டி ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஓய்வு பெற்ற விமானப்படை போலீஸ்காரர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி பெரும்பாளியை சேர்ந்தவர் ஜெயமன் (வயது 68). விமானப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் மர்ம ஆசாமிகள் பட்டாக்கத்தியுடன் புகுந்தனர். பின்னர் அந்த ஆசாமிகள் ஜெயமன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை மிரட்டி, பணம் மற்றும் நகைகள் எங்கு உள்ளது? என கேட்டுள்ளனர். இதனால் பயந்துபோன ஜெயமனும், அவருடைய குடும்பத்தினரும் பீரோவை கைக்காட்டினர்.
அந்த ஆசாமிகள் பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துக்கொண்டு, சத்தம்போட்டால் கொன்று விடுவோம் என பயமுறுத்தி விட்டு வெளியில் இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
போலீசில் புகார்
இதையடுத்து பல்லடம் போலீசில் ஜெயமன் புகார் அளித்தார். உடனே பல்லடம் ேபாலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ேமலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகளின்உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை போன ரூ.1 லட்சத்தை ஜெயமன் அவரது பேரனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பல்லடம் அருகே கொள்ளையர்கள் புகுந்த வீட்டின் முன்பு பொதுமக்கள் நிற்பதை படத்தில் காணலாம்.