< Back
மாநில செய்திகள்
காதலை துண்டித்து வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரம்:கிருஷ்ணகிரியில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்துவாலிபர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

காதலை துண்டித்து வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரம்:கிருஷ்ணகிரியில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்துவாலிபர் கைது

தினத்தந்தி
|
14 March 2023 12:30 AM IST

காதலை துண்டித்து வேறு ஒருவருடன் இளம்பெண் பழகியதால் ஆத்திரம் அடைந்த அவரது முன்னாள் காதலன், அந்த இளம்பெண்ணை கத்தியால் குத்தினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்

கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். முன்னதாக நகைக்கடை ஒன்றிலும் வேலை செய்தார். அப்போது இந்த பெண்ணிற்கும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஆனங்கநல்லூரை சேர்ந்த விவேக் ஆனந்த் (29) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.

விவேக் ஆனந்த் கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2-வது பகுதி கண்ணப்பன் நகரில் தங்கி போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு சித்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கத்திக்குத்து

இதனால் விவேக் ஆனந்த்துடன் இருந்த காதலை இளம்பெண் துண்டித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த விவேக் ஆனந்த் இளம்பெண்ணை கண்டித்தார். ஆனாலும் அவர் இதை பொருட்படுத்தாமல் சித்திக்குடன் இருந்த தொடர்பை கைவிடாமல் இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவேக் ஆனந்த் நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே விவேக் ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் வலதுபுற கழுத்திலும், முகத்திலும் குத்தினார்.

கைது

இதில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேக் ஆனந்தை கைது செய்தனர்.

அவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்