மயிலாடுதுறை
கிர்ணிபழம், தர்பூசணி விற்பனையாகாமல் தேக்கம்
|திருவெண்காடு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கிர்ணிபழம், தர்பூசணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
திருவெண்காடு:
கோடைகாலத்திற்கு ஏற்ற பழங்கள்
வழக்கமாக கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் தாகம் அதிகமாக ஏற்படும். உடலில் சூடு அதிகமாக இருக்கும். தண்ணீர் தாகம் மற்றும் உடல் சூட்டை தணிப்பதற்காக பொதுமக்கள் குளிர்ந்த தண்ணீர், குளிர்பானங்கள், பழரசங்கள், இளநீர், நுங்கு, மோர் ஆகியவற்றை வாங்கி அருந்துகிறார்கள். மேலும், நீர்ச்சத்து அதிகமுள்ள தர்பூசணி பழங்கள், கிர்ணி பழம் மற்றும் திராட்சை போன்ற பழ வகைகளையும் வாங்கி சாப்பிடுகிறார்கள்.குறிப்பாக கோடை காலத்துக்கு ஏற்ற பழங்களாக தர்பூசணி மற்றும் கிர்ணி பழம் விளங்குகிறது. இவற்றை சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் அதிகளவு விற்பனை செய்வதை காண முடியும். தர்பூசணி பழத்தில் நீர்சத்து அதிகமாக இருப்பதாலும், தாகத்தை தணிப்பதாலும் பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
கிர்ணி பழம்
அதேபோல, கிர்ணி பழமும் வெயில் காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழம் ஆகும். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து இதில் அதிகமாக இருப்பதாகவும், பார்வை குறைபாடு, நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் இந்த பழத்தில் அதிகம் இருப்பதாகவும் மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.நல்ல மண் வளம் கொண்ட பகுதிகளில் மட்டுமே கிர்ணி பழம் மற்றும் தர்பூசணி விளைகிறது. அந்தவகையில் திருவெண்காடு, புதுத்துறை, கோட்டகம், திருவாலி, காரமேடு ஆகிய பகுதிகளில் இந்த பழங்கள் விளைவிக்கப்படுகிறது.
விற்பனையின்றி தேக்கம்
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த பழங்கள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகாததால் விவசாயிகள் சாகுபடி செய்வதையே நிறுத்தி விட்டனர். ஒரு சில விவசாயிகள் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்யப்பட்ட கிர்ணி பழங்களும் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், சுமார் 50 ஏக்கர் அளவில் சாகுபடி செய்யப்பட்ட கிர்ணி பழங்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் கிர்ணி பழம் கிலோ ரூ.10 லிருந்து ரூ.12 வரை விற்பனையாகி வந்த நிலையில் இந்த ஆண்டு கிலோ ரூ.6-க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. மார்ச் முதல் ஜூன் வரை வெயில் அதிக அளவில் இருக்கும். இதனால், உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் கிர்ணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
ஆனால் தற்போது பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்வதாலும், செயற்கை குளிர்பானங்கள் அதிகளவு வந்து விட்டதாலும் பொதுமக்கள் கிர்ணி பழத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகளும் இங்கு சரிவர வராததால் விற்பனை மந்தமாக உள்ளது. நாளடைவில் இந்த பழங்கள் அழுகி வீணாகி விடுகின்றன. தர்பூசணி விற்பனையும் இதே மாதிரிதான் உள்ளது.இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.