சுப்ரீம் கோர்ட்டில் தமிழில் வாதாடும் வாய்ப்பு உருவாகும் - மத்திய சட்ட மந்திரி
|சுப்ரீம் கோர்ட்டில் தமிழில் வாதாடும் வாய்ப்பு உருவாகும் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.
மத்திய சட்ட மந்திரி
மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்தபடியே மயிலாடுதுறை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டை காணொலியில் தொடங்கி வைத்து, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியதாவது:-
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் நீதித்துறையின் அடிப்படை கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் தமிழக கோர்ட்டுகள் சிறப்பாக செயல்பட்டன. மாநில அரசும், நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால்தான் நீதித்துறையின் அடிப்படை உள்கட்டமைப்புகளை நல்லமுறையில் மேம்படுத்த முடியும்.
நீதித்துறையின் மேம்பாட்டிற்காக அதிக அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது.
ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
மத்திய அரசு ஒதுக்கிய தொகையை உரிய முறையில் செலவழித்தால்தான் எதிர்காலத்தில் கூடுதலாக நிதி ஒதுக்க முடியும். இ-கோர்ட்டு திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் எதிர்காலத்தில் நம் நாட்டில் உள்ள கோர்ட்டுகள் காகிதம் இல்லா கோர்ட்டுகளாக செயல்படும்.
நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது, பெரும்பிரச்சினையாக இருக்கிறது. 10 முதல் 15 ஆண்டுகளான வழக்குகளுக்கும் தீர்வு காண முடியாத நிலை உள்ளது.. இதற்கு முடிவு கட்ட வேண்டும். இந்தியாவில் 4 கோடியே 90 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழில் வழக்காடும் நிலை
கோர்ட்டுகளில் வழக்காடும் மொழி முக்கியமானது. மக்களுக்கான நீதியை அவர்கள் மொழியில் கொடுத்தால்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
தமிழகத்தில் அனைத்து கோர்ட்டுகளும் தமிழில் நடக்கிறது. தொழில்நுட்ப வசதி, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் கூட தமிழில் வாதாடும் வாய்ப்புகள் உருவாகும். பொதுமக்கள் கோர்ட்டை பயம் இல்லாமல் அணுக வேண்டும். போலீசாரும், பொதுமக்களை மென்மையாக அணுக வேண்டும்.
பாலியல் வழக்குகள்
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் நீதிக்காக நீண்ட நாள் காத்திருப்பதை ஏற்க முடியாது. இதுபோன்ற குற்றங்களில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும்.
கோர்ட்டுகளின் மாண்பை வக்கீல்கள் பாதுகாக்க வேண்டும். நீதிபதிகளும், வக்கீல்களும் இணைந்து பணிபுரிய வேண்டும். இந்தியாவில் நீதித்துறையை பலப்படுத்துவது மட்டுமல்லாது, சுதந்திரமாகவும் செயல்பட தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசினார்.