திருச்சி
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் மழலையர் பள்ளி அங்கீகாரம் ரத்து
|திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் மழலையர் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
திருச்சி வார்னஸ்ரோடு பகுதியில் "பிரில்லியன்ட் பிளே ஸ்கூல்" என்ற பெயரில் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) நேரில் சென்று ஆய்வு செய்து, பள்ளி சார்ந்த ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால் பள்ளி தரப்பில் ஆவணங்களை உரிய கால அவகாசத்துக்கு பிறகும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட தொடக்க அனுமதியை ரத்து செய்தும், பள்ளியை மூடுவதற்கு ஆணை பிறப்பித்தும் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் மாணவர்களை இந்த பள்ளியில் சேர்க்கக்கூடாது. பள்ளியில் படித்த குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு பெற்றோரின் ஒப்புதலுடன் மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து, இதுதொடர்பான அறிக்கையை பள்ளி சுற்றுச்சுவரில் கல்வித்துறையினர் ஒட்டி உள்ளனர். இதுபோல் கோப்பு பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றின் கட்டிடம் சரியில்லாத காரணத்தல் அதன் அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், மாற்று கட்டிடம் ஏற்பாடு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.