சேலம்
தலையில் கல்லை போட்டு டெம்போ டிரைவர் கொலை
|ஓமலூர் அருகே தலையில் கல்லை போட்டு டெம்போ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர்:-
ஓமலூர் அருகே தலையில் கல்லை போட்டு டெம்போ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டெம்போ டிரைவர்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற செந்தில்குமார் (வயது 43). டெம்போ டிரைவர். இவரது மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு தேவராஜ் (14) என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சேட்டுக்கு செம்மாண்டப்பட்டி ஊராட்சி காளியம்மன் கோவில் பகுதியில் வீடு உள்ளது. இங்கு இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
ரத்த வெள்ளத்தில் பிணம்
இந்த நிலையில் நேற்று காலை அவரது வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது சேட்டு தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இளமுருகன், இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சேட்டு உடல் அருகில் கல் ஒன்று கிடந்தது. இதனால் அவரை யாரோ தலை மீது கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு கொலையாளியின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் சேட்டுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்?. குடும்ப தகராறில் இந்த கொலை நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர் அருகே வீட்டில் டெம்போ டிரைவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.