சென்னை
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை - கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு
|வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று, அவர் அணிந்து இருந்த தங்க கம்மலை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். மேலும் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையையும் திருடிச்சென்று விட்டனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை வேல்நகர் அம்பேத்கர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் ராஜம்மாள் (வயது 70). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் வீட்டில் இருந்து ராஜம்மாள் வெளியே வரவில்ைல. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். கதவு திறந்து கிடந்தது.
வீட்டின் உள்ளே ராஜம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம், தலை, கழுத்து உள்பட உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பீர்க்கன்காரணை போலீசார், கொலை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது கொலையான ராஜம்மாள் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் மாயமாகி இருப்பது தெரிந்தது.
வீட்டில் தனியாக இருந்த ராஜாம்மாளை, மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு அவரது காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கொள்ளையடித்து சென்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ராஜம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் பீர்க்கன்காரணை ஏரிக்கரை தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கருவறையில் இருந்த ஐம்பொன் சாமி சிலையை திருடிச்சென்று உள்ளனர். இந்த கோவிலில் நடைபெறும் 4-வது திருட்டு சம்பவம் இதுவாகும்.
இந்த இருவேறு சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பீர்க்கன்காரணை பகுதியில் ஒரே நாள் இரவில் நடந்த இந்த கொலை, ெகாள்ளை சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.