< Back
மாநில செய்திகள்
கிளாம்பாக்கத்தை மண்டல போக்குவரத்து மையமாக்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
மாநில செய்திகள்

'கிளாம்பாக்கத்தை மண்டல போக்குவரத்து மையமாக்க வேண்டும்' - முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தினத்தந்தி
|
8 Feb 2024 9:30 PM IST

கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகர் மற்றும் புறநகர பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை, அனைத்து பொதுப்போக்குவரத்து வசதிகளையும் ஒன்றிணைக்கும் வகையிலான, நவீனமான மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 16 பேருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கான பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால், வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனர் என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையை மாற்றவும், எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டும் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை, அனைத்து பொதுப்போக்குவரத்து வசதிகளையும் ஒன்றிணைக்கும் வகையிலான, நவீனமான மண்டல போக்குவரத்து மையமாக (Regional Mobility Hub) மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உடனடியாக 300 முதல் 500 புதிய MTC பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகர் மற்றும் புறநகர பகுதிகளுக்கு இயக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வெளியூரில் இருந்து வரும் பேருந்துகளுக்கும், மாநகர பேருந்துகளுக்கும் இடையே முழுமையான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் தொடர்வண்டி மற்றும் மெட்ரோ இணைப்பு எளிதாகவும் உடனுக்குடனும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



மேலும் செய்திகள்