தூத்துக்குடி
குரும்பூரில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் சிக்கினார்
|குரும்பூரில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் சிக்கினார். மேலும் ஒரு வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தென்திருப்பேரை:
இளம்பெண்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூருக்கு பஸ்சில் வந்துள்ளார். பின்னர் அவர் குரும்பூரிலுள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பஜாரில் சென்று கொண்டிருந்த அவரை பின்தொடர்ந்து ஆட்டோ வந்துள்ளது. அதை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவரான ஸ்ரீவைகுண்டம் பெருங்குளம் சன்னதி தெரு ஐய்யப்ப நயினார் மகன் முத்துராம்குமார் என்ற தங்கம்(வயது 22)), இளம்பெண்ணை உரசிக் கொண்டு ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அவரிடம் பேச்சுக்கொடுத்த அவர், இளம்பெண் செல்லவேண்டிய முகவரிக்கு கூட்டி செல்வதாக கூறி ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
பாலியல் பலாத்காரம்
குரும்பூர் பஜாரில் இருந்து திடீரென்று அந்த பெண் கூறிய முகவரிக்கு செல்லாமல் ஏரல் ரோட்டுக்கு ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அங்கு மறுகால் ஓடை பாலத்தின் கீழ் பகுதிக்கு அவரை இழுத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அவரது கூட்டாளியான வாலிபர் ஒருவரும் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். சத்தம் போடக்கூடாது என இளம்பெண்ணை மிரட்டிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனராம்.
ஆட்டோ டிரைவர் சிக்கினார்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று குரும்பூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் முத்துராம்குமாரை கைது செய்தார். மேலும் அவரது கூட்டாளியான குரும்பூர் நெட்டையன்காலனியை சேர்ந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.